இசங்களாலும் இயங்களாலும் இயங்குபவள்

lakshmi balakrishnan
சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருந்தது. இந்திய ஆண்களில் நான்கில் ஒருவர் தம் வாழ்வில் ஏதோ ஒரு முறையாவது பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனர். ஐந்து ஆண்களில் ஒருவர் தம் மனைவியை அல்லது துணைவியைக் கட்டாயக் கலவிக்கு ஆளாக்கியிருக்கிறார். 38% ஆண்கள் மனைவியைத் தாக்கியிருக்கின்றனர், 65% ஆண்கள் குடும்ப ஒற்றுமைக்காக பெண்களை அடிப்பதில் தவறில்லை என்று நம்புகின்றனர்.

உரிமையை மீட்கும் பெண்கள்- சொல்வனம்

பெண் விடுதலை என்பதை ஆணுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்வைத்தே தமிழகத்தில் உள்ள பெண்ணியலாளர்களில் பெரும்பாலானவர்கள் செயல்படுவதாக ஒரு தோற்றம் இருக்கிறது....பெண் விடுதலை என்பதை ஆணுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்வைத்தே தமிழகத்தில் உள்ள பெண்ணியலாளர்களில் பெரும்பாலானவர்கள் செயல்படுவதாக ஒரு தோற்றம் இருக்கிறது. அப்பட்டமான உண்மையை சொல்வதானால், பெண் விடுதலை என்பது வன்முறையிலிருந்து விடுதலை என்ற நிலையை அடையவே வெகு தூரம் போக வேண்டியிருக்கும் போலிருக்கிறது. பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் பங்கு, சம உரிமை, சம வாய்ப்பு என்பதெல்லாம் போக்கு காட்டும் கோஷங்களாக வெற்றி பெற்று, உலகெங்கும் வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் தீனக்குரலை மறைத்து விட்டிருக்கின்றன.
=========================================
2009-ல் எழுதியது. இதோடு பகிரலாம் என்று தோன்றியதால்.. பகிர்கிறேன்.
=========================================
எழுதலாமா வேண்டாமா என்ற நீண்ட யோசனைக்குப் பிறகு எழுதுகிறேன். நில எல்லைகள் மற்றும் நிற வேறுபாடுகள் போலவே ஆண்-பெண் சமத்துவமும் இன்னும் சமன்படாத ஒன்றாகவே இருக்கிறது.

பெண்ணியம் பெண்களால் அங்கீகரிக்கப் படவேண்டிய, இன்னும் முழுமையாக அங்கீகரிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. பெண்ணியம் நம் மனத்தடைகளை நாமே வெல்வதற்காகவே தவிர ஆண்களுக்கு எதிரான போராட்டம் இல்லை.

நான் இதுவரைக் கண்ட பெண்ணியக் கொள்கைவாதிகளிடம் தன் சொந்த விருப்பு-வெறுப்பு அனுபவங்களின் அடிப்படையிலான கசப்புணர்வுகள், ஏதோவொரு தீவிர வெறுப்புணர்வு மிகுந்து, சமூக சமநிலைப்பாடுகளுக்கானப் போலிக் குரல்களில் தன் சொந்தப் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும் கேடயமாக மட்டுமே வெளிப்படுகிறது.

பெண்களுக்கான உரிமைகளை, வரம்புகளை, எல்லைகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் அவசரத்தில் பெண்கள் தம் மனங்ளையும் கடினமாக்கிக் கொண்டுவிட்டதால் எந்தவொரு குறிப்பிட்ட ஒரு விஷயம் குறித்த யோசனையும் ஒரே இடத்தில் உறையச் செய்துவிடுகிறது.

தன்னை நசுக்கும் எதிராளியை எதிர்ப்பதில் அவசரமும், சில நேரங்களில் "நான் பெண்" என்ற கழிவிரக்கத்தை எதிர்பார்ப்பதும், சில நேரங்களில் "தான் பெண்" என்ற ஆணவமும், எந்தவொரு எதிராளியையும் சுண்டெலி போல ஒரு மூலையில் கார்னர் செய்துச் சிக்க வைக்கும் போக்கும், பெண்ணின் / பெண் உணர்வுகளுக்கான மதிப்பு என்றும் உணரப்படாது.

ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க எந்நிலையிலும் நிதானம் தவறுவதும், பிரச்சினை தவிர அனைத்தும் பேசுவதும், அனாவசியக் கூக்குரலும் சந்தர்ப்பவாதிகளின் குறுக்கீட்டால் பாதிப்பின் தன்மையை நீர்த்துப் போகச் செய்து நிலைமையின் தீவிரத்தையும் குறைத்து விடுகிறது.

காழ்ப்புணர்வு பகைமை அல்லது வெறுப்பு போன்ற ஆயுதங்கள் பெண்ணியக் கொள்ளைகளை அல்லது போராட்டங்களை அதல பாதாளத்தில் வீழ்த்துவதாகவே இருக்கின்றன. பெரும்பாலான பெண்ணிய இயக்கங்களும் தனிநபர்கள் மீதான வன்மங்களைத் தீர்க்கவே வழிவகுக்கின்றன. யார் கை வலிமையாக ஓங்கியிருக்கிறது என்பதன் அடிப்படையில் மற்றவரை நிராயுதபாணியாக்கி வீழ்த்தும் குரூர யுத்த தந்திரம் பெண்ணியத்திற்கு தோல்வியையே தருகிறது.

ஊடகங்களும் சந்தர்ப்பவாதிகளும் விளம்பரம் தேடி பரபரப்புண்டாக்கிக் கொள்ளும் வாய்பாகவே, பாதிக்கப்பட்ட பெண்களை கருதி கையாள்கிறார்கள். தன் நோக்கம் நிறைவேறியதும் கழன்று கொள்ளும் போக்கும் அதிகமாகக் காணப்படுகிறது. ஆறுதலின் பேரில் எதிரிக்கு எதிரிக்கு நண்பன் என்கிற முறையிலும் ஆதரவு தேடும் நிலையில் அப்போதைக்கு யார் ஆதரவுக் குரல் தருகிறாரோ அவரிடம் தஞ்சம் புகுந்து ஆதரவாளர்களின் சொந்த வன்மைகளைத் தீர்க்கும் பகடைக்காயாக ஆகிவிடுகிறார். அந்த க்ஷண நேரப் போராட்டம், பாதிக்கப்பட்டவர் தனக்கு நீதியாக எதைக் கருதுகிறார்? தனக்கான அநீதிக்கு தண்டனை என்று எதை எதிர்ப்பார்க்கிறார்? எப்படி? என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்கவும் அனுமதிக்காத வகையில் ஆக்கிவிடுகிறது.

சவாலான தொழில்களான டிரக், பேருந்து ஓட்டுதல் போன்றவைகளை பெண்கள் இன்னும் திறமையாகவும் நிதானமாகவும் செய்பவர்களாக இருப்பினும் பொதுப்பான்மையான கருத்துக்களால் இந்தத் தொழிற் வாய்ப்புக்கள் நிராகரிக்கப்படுவதும், விளையாட்டுத் துறையில் பெண்களின் நிலை இன்னும் உயராமல் இருப்பதும் குறித்த சிந்தனைகளும் செயலாக்கங்களும் தேவையாக இருக்கிறது.

போராட்டங்கள் பெண் சிசுக் கொலைகளுக்கு எதிராகத் தேவையாக இருக்கிறது. பெண் திருமணத்தைக் குறித்தே வளர்க்கப்படுவதும், அவளுக்கான அறிவுத்திறன்களனைத்தும் மேற்படிப்பும், அவளது திருமணச் செலவுகளுக்கு ஈடாக நினைக்கப் பெறுவதும் ஆகிய சிந்தனைகளுக்கு எதிராகத் தேவையாக இருக்கிறது.

தனிமனித ஒழுக்கமும் கற்பும் ஒன்றென கருதுவதும், குழந்தைப் பேறின் பின்பான வேலைவாய்ப்புக்கள் குறைவது பற்றியும், விதவைகள் மறுமணம் பற்றியும் இன்றும் தயக்கத்துடனே இருக்கிறது குறித்த விழிப்புணர்வு பெற பெண்ணியம் தேவையாக இருக்கிறது.

இண்டியன் பார்பி-யைப் பார்த்திருக்கிறீர்களா? உடையணிவதும், பணம் ஈட்டுவதும்தான் பெண்ணியம் என்று இன்னும் நம்பி கொண்டிருக்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள்.

அதான் சம்பாதிக்கிறாளே, அவளே வேண்டும் என்பதை செய்துகொள்வாள், என்று பெண்ணின் சுற்றமும் நட்பும் கூட அவளை மனத்தால் கூட ஆதரிக்காத நிலை இன்றும் பல பெண்களுக்கு இருக்கிறது.

தற்காத்துக்கொள்ள பெண்ணியம் கேடயமோ ஆயுதமோ இல்லை, தனிநபருக்கான வலிகள் தீர்த்துக் கொள்ளப்படவேண்டியவை. தனிநபர் பிரச்சினைகள் எப்படி பெண்ணிய நேர்கோட்டில் இணைய முடியும்.

உட்கார்ந்து பேசினாலே தீரக் கூடிய சின்ன கருத்து வேறுபாடுகளையும் கூட பிரச்சினை என்று அழைப்பதும், ஒரு பிரச்சினையாக உணர்வுகளை அணுகுவதிலும் ஒப்புதல் இல்லாததால் பெண்ணுக்கு ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளையும் பெண்ணியப் பிரச்சினையாக நோக்குவதும் இப்படியழைப்பதும் மிகவும் அலுப்பாகவே இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்ணே தனியாகச் சமாளித்தாக வேண்டியிருக்கும் குடும்ப வன்முறை. நாம் பேசும் இயங்களும் இசங்களும் இதற்கு எப்படி தீர்வு ஆகும்?

பெண்ணாகவே பெறுகிறாள் என்ற காரணத்திற்காக நிராதரவாக விடப்படும் தாய்களுக்காகவும் இயங்களையும் இசங்களையும் பயன்படுத்துங்கள்.

காதி கிராமோத்யோக் பண்டார் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் விற்கப்படும் பொருட்களைப் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம் வாங்கியிருக்கிறோம்?

உண்மையாகவே மற்றவரின் ஆதிக்கத்தால் அடக்கப்படும் பெண்கள் இன்னும் மனத்தால் முணுமுணுக்கக் கூட ஆரம்பிக்கவில்லை என்பதே முகத்திலறையும் உண்மை.

கல்வியறிவு பெற்று நேர்கொண்ட இலக்குகளைக் குறித்த பார்வையோடு சுயசார்பு பெற்றவர்கள் ஏற்கனவே பல துறைகளில் அவரவருக்கானத் தனித்துவம் பெற்ற ஆளத் துவங்கி விட்டனர். ஒரு பெண்ணாக நாம் நமது நடைமுறை ஸிஸ்டங்களில் நம் வேலைகளை இலகுவாக்கும் சிற்சில மாற்றங்களை விரும்புகிறோமா அல்லது ஸிஸ்டத்தை விட்டே வெளியேற விரும்புகிறோமா?

3 comments:

Pranavam Ravikumar said...

Agreed with you, not completely. We can't completely blame everyone even if we got some weeds somewhere.

இராஜராஜேஸ்வரி said...

பெண்ணியம் நம் மனத்தடைகளை நாமே வெல்வதற்காகவே தவிர ஆண்களுக்கு எதிரான போராட்டம் இல்லை.//
must thing.

ஹுஸைனம்மா said...

//வன்முறையிலிருந்து விடுதலை என்ற நிலையை அடையவே வெகு தூரம் போக வேண்டியிருக்கும்//

:-(((

இது முதல்ல நடக்கட்டும்; மத்தத அப்புறம் பாப்போம்னு சொல்லத் தோணுது.

Post a Comment