பச்சோந்திகள்


ஜன்னல் அருகில் நின்றபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அரளிச்செடியில் அங்குமிங்குமாய் சிலச் சிவப்புபூக்கள் இருந்தன. தரையிலும் சில பூக்கள் சிந்தி இருந்தன. சலனமே இல்லாத மதியம். அரளிச் செடியையே வெறித்துக் கொண்டிருந்தேன். வேலைகள் எல்லாம் முடிந்த வெறுமை. சந்தடியே இல்லாத வீடும் சாலையும் மனமும்தான்..

அரளிச் செடியில் அசைவு தெரிய, கூர்ந்து கவனித்ததில் ஒரு பச்சோந்தியைப் பார்த்தேன். வேகமாய் வெளியே சென்று மரத்தின் அருகில் நின்று கொண்டேன். பச்சோந்தியைக் கவனிப்பது சுவாரசியமாக இருந்தது.

இலைகளினூடே இருக்கும் போது முழுதும் பச்சையாய் இருந்தது. வாலைச் சுருட்டிக் கொண்டிருந்தது. நகராமல் நின்று கொண்டிருந்தது. ஒரு வேளை அதுவும் ஏதோ சிந்தனை வசமாயிருந்திருக்கும். ஓணான் போன்ற உருவத்திலேயே இருந்தது. வண்ணம் மாறுவது மட்டும் தான் அதன் தனித்துவம் போல இருக்கிறது. இப்போது நல்ல இளம்பச்சை நிறத்தில் பசேலென்று இருக்கிறது. அமைதியாய், குறுகுறுப்பாய், நளினமாய் உடலை வளைத்துக் கொண்டு, அமைதியாய் அங்கேயே அமர்ந்திருந்தது. மெல்ல நகர்வதும் மீண்டும் அமைதியாய் அமர்வதும் என்று பார்க்க அழகாக, பாவாடைச் சிறுமி போல.

சிறிது நேரம் அப்படியே இருந்து விட்டு, காம்பவுண்டு சுவற்றுக்கு மேல் நிழலாக இருந்த பக்கம் நகர்ந்து சென்றது. இப்போது சிமெண்டின் நிறம் அதன் மேல் பரவ ஆரம்பித்தது. தலையை மேலே தூக்கிக் கொண்டு ஒரு பதின்பருவத்து கருவத்தோடு என்னைப் பார்ப்பதும், தலையைக் கவிழ்த்துக் கொள்வதும், வெளியே பார்ப்பதும், வேறெங்கோ பார்ப்பதும் என்று கொஞ்சங்கொஞ்சமாய் வெளுப்பான சாம்பலின் நிறமாகி இருந்தது அது. வால் கொஞ்சமாக நீண்டிருந்தது. கண்கள் வேறு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு திசைகளைக் கவனித்து அலைபாய்ந்து கொண்டிருந்தது, பசலை கொண்ட காதலி போல.

வெயில் கொஞ்சம் அதிகமாகவும் மீண்டும் மெல்ல ஊர்ந்து மரத்தின் அடிப்பகுதிக்கு வந்து ஈரமண்ணில் அமர்ந்து கொண்டபோது முழுவதும் மண்ணின் நிறமாகியிருந்தது. தரையில் இருந்த மண்புழுக்கள் கறுப்புப் பூச்சிகள் எல்லாம் அதன் அடியில் சென்று ஒண்டிக் கொண்டன. அதன் உடல் சற்று விறைப்பாய் வளைந்திருந்தது. வால் நீண்டு கீழ்நோக்கி இருந்தது. சுருட்டிக் கொள்ளவில்லை. ஏதோ எச்சரிக்கையுடன் இருப்பது போல சற்றே கீழ் நோக்கி தலை வளைந்தும் விழிகள் அங்குமிங்கும் அலைப்பாய்ந்தும் கொண்டிருந்தன. ஆனாலும் இருந்த இடத்தை விட்டு அகலாமல் தன் கால் விரல்களை ஊன்றிக் கொண்டு நின்றிருந்தது.

சாயுங்காலம் ஆனதும் அது மெதுவாக மரத்தடியை விட்டு எங்கோ செல்ல ஆரம்பித்தது. போகும் தருவாயில்தான் கவனித்தேன், திடீரென நீளமாக தன் நாக்கை நீட்டி எருக்கஞ்செடியில் இருந்த வெட்டுக்கிளியை கவ்விக் கொண்டது. அத்தனை வேகமாக நாக்கை சுழற்றுவதைக் கண்டதும் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அதை விழுங்கி விடாமல் வாயிலேயே கவ்விக் கொண்டது. கூடு ஏதும் இருக்குமோ என்னவோ. குடும்பமும் இருக்கலாம். தன் துணையைக் காதலிக்கும்போது எந்தவண்ணத்தில் இருக்குமோ தெரியவில்லை. தன் பிஞ்சுகளை முத்தமிடும்போது எந்தவண்ணத்தில் இருக்கும்? தன் கூட்டைச் சென்றடையும் பொழுதில் என்ன வண்ணத்தில் இருக்கும்? வண்ணங்களை மாற்றிக் கொண்டே இருக்கும் போது, தன் தோலின் உண்மையான வண்ணத்தை எப்படி அடையாளங்காணும்? நாளை இதே அரளிச் செடிக்கு வரும் போது அரளிப்பூக்கள் அதிகமாகி இருந்தால் அரளியின் வண்ணம் சூடி இருக்குமோ என்னவோ?

யோசித்துக் கொண்டே கூடத்தில் சென்று அமர்ந்தேன். எங்கள் திருமணப் புகைப்படம் எதிரே டிவிக்கு சற்றே பக்கமாக இருந்தது. நெற்றிவகிட்டில் குங்குமம் இடும் போது எடுத்தது. அந்தப் புகைப்படத்தில் நான் கண்களைமூடிக் கொண்டு அவர் தோளில் சாய்ந்திருந்தேன். அந்தப் புகைப்படத்தில் ஏனோ முகம் முழுதும் சிவப்பாக மாறி இருந்தது.

6 comments:

ஹுஸைனம்மா said...

என்னமோ சொல்ல வர்றீங்க, ஆனா என்னன்னுதான் புரியல. கவிதையே எழுதிருக்கலாம் இதுக்கு.

ஹுஸைனம்மா said...

இன்னொருக்கா வாசிச்சதும் கொஞ்சம் பிடிபடுது.

பெண் உறவுகளுக்கேற்ப, சூழ்நிலைகளுக்கேற்ப நிறம் மாற வேண்டியிருக்குன்னு சொல்றீங்களோ?

மகளிர்தின சிறப்பு இடுகை போல!!

ஹுஸைனம்மா said...

இல்லை, நிஜமாவே பச்சோந்தித்தனமா நடந்துகொள்பவர்களைக் குறித்ததா?

Vidhoosh said...

நன்றி ஹுசைனம்மா :) ////பெண் உறவுகளுக்கேற்ப, சூழ்நிலைகளுக்கேற்ப நிறம் மாற வேண்டியிருக்குன்னு சொல்றீங்களோ? மகளிர்தின சிறப்பு இடுகை போல!! /// அதேதான். :)

Paleo God said...

ஏங்க விதூஷ் ஹுஸைனம்மாவ இப்படி கலங்கடிச்சிட்டீங்களே நியாயமா? :))

இராஜராஜேஸ்வரி said...

மகளிர் தின வாழ்த்துக்கள்.சூழ்ழுக்கு ஏற்பத்தன்னைத் தயாரித்துக் கொள்வது
பெண்ணினத்திற்குப் புதிதல்லவே.

Post a Comment