நண்பர் நந்தாவின் கேள்வியால் எழுந்த எண்ணங்கள்

நான் எங்கேயும் இதுவரை பகிர்ந்து கொள்ளாத சில எண்ணங்களைப் பகிரும்படி இந்தக் கதையை எழுதத் தூண்டிய உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்புக்கு மிக்க நன்றி.

மேலும் நண்பர் நந்தாவின் கேள்வி இந்த பதிவை எழுத வைத்தது. நன்றி நந்தா.

////கதையைப் ப்ரகலாதன் கதை கூறுவதோடு முடித்து // எனக்கு இன்றும் குழப்பமாகத்தான் இருக்கு. பெண் விடுதலை என்றால் என்ன?
// என்பதை நீக்கியிருந்தால் இது ஒரு அபாரமான சிறுகதை ////
என்று நண்பர் நந்தா எழுதி இருந்தார்.

உண்மையாகவே சுய சார்பு என்ற பெயரில் பணம் சம்பாதிப்பது / செலவழிப்பது, மனம் போனபடி உடை அணிவது, வாய்க்கு வந்ததை பேசுவது, மாற்றி ஆண்களை அவமானப் படுத்திப் பேசுவது, டிவோர்ஸ் என்ற பெயரில் குடும்பத்தைச் சிதைப்பது எல்லாம் பெண் சுதந்திரமா? பெண் விடுதலை / பெண் சுதந்திரம் என்ற பெயரில் நிறைய இடங்களில் இதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. இதை கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் சாட்சி நானேதான்.

நான் இக்கதையில் பெண்ணியம் பேசவில்லை. ஒரு சில பெண்களின் நிலை வேண்டுமானால் மாறி இருக்கலாம். ஆனால் பெண்கள் முன்னேறிவிட்டதாக தம்பட்டம் அடிக்கப்படுகிறதால் ஏற்பட்ட ஆதங்கம் தான் அந்தக் கதை உருவாகக் காரணம். இந்தக் கேள்வி அடிக்கடி என் மனதில் எழுவது உண்டு. உண்மையாகவே பெண் விடுதலை என்றால் என்ன?

அவளின் பெண்மையின் உணர்வுகள் அவள் சொந்தக் குடும்பத்தினரால் புரிந்து கொள்ளப்படுவது முக்கியமா? இல்லையா? இது இன்றும் எத்தனை இடங்களில் நடக்கிறது.

இயல்பாகவே திறமையிலோ அல்லது மனம் / உடல் பலத்திலோ ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று நினைக்கிறேன் நான்.

ஒரு பெண் காதலிக்கும் போதும், தாய்மை அடையும் போதும்தான் உணர்வுகளில் ஆண்களிடம் இருந்து வித்தியாசப்படுகிறாள். நானும் ஒரு பெண் என்பதால், காதலித்து இருப்பதால், ஒரு தாயாய் இருப்பதால் இதைக் கூறுகிறேன்.

ஆனால் சில (பல) பெண்களின் நிலை இன்றும் கூட, தன்னுடன் இருக்கும் மற்றவர்களுக்காக அந்த இரண்டு உணர்வுகளையும் தியாகம் என்ற பெயரில் தொலைத்து விடுகிறாள், தொலைத்துக் கொண்டு இருக்கிறாள். அதனாலேயே பல பெண்கள் பெண்களாகவே இருப்பதில்லை என்பது என் தாழ்மையானக் கருத்து.

பெண்கள் வீட்டுக்குளே சிறை பட்டு (அல்லது சிறைபட்டதாக கூறப்பட்ட) இருந்தக் காலங்களில் குறைந்த பட்சம் அவளுக்குத் தாய்மையின் நிறைவாவது இருந்தது.

30-40 வருடங்களுக்கு முன் ஜானகி என்ற பெண்ணின் காதல் அவள் முதன்முதல் சொந்தமான தாயாலேயே நசுக்கப்பட்டது. அங்கேயும் தான் பெண்மைக்காக அவள் பேசவில்லை.

இன்று சுய சார்பு அடைந்ததாக கருதப்படும் பத்மாவின் தாய்மையும் அவள் கணவனால் இழப்புக்கு உள்ளாக்கப் படுகிறது. இப்போதும் பெண்மைக்காக இவளும் பேசவில்லை.

நான் கூற வந்த ஆனால் கூறாத கருத்து என்னவென்றால் பெண்மைக்காக பாரதியோ மற்றவரோ பேசுவதால் பிரயோஜனம் ஏதும் இல்லை. பெண்கள் தான் மெல்லிய உணர்வுகளை பேசவேண்டும். சூழ்நிலை நிர்பந்தங்களுக்காக அதை ஒருபோதும் விட்டுத் தரக்கூடாது. அன்றுதான் பெண்கள் பெண்களாக இருப்பார்கள். ஆணுக்கு நிகராய் இருக்கவேண்டும் என்பதெல்லாம் வெறும் பிதற்றல்.

ஒரு ஆணும் பெண்ணும் மன உணர்வுகளின் அடிப்படையில் என்றுமே சமமாக இருக்க முடியாது என்பதும் என் தனிப்பட்ட வாதம்.

இரண்டு நிலைகளிலேயுமே யாரோ ஒருவரின் பேராசை / நிர்பந்தங்கள் ஒரு பெண்ணின் உணர்வுகள் மதிக்கப்படாமல், புரிந்துகொள்ளப்படாமல் போவதற்குக் காரணம் ஆகிறது.

ஒரு ஆணுக்கு இந்நிலை இல்லையா என்று கேட்கக்கூடும். ஆனால் விகிதாசாரத்தில் அதிகம் பெண்களே சூழ்நிலைக் கைதிகள் ஆகிறார்கள். அப்படி அவள் ஆவதற்கு சமூகமோ அல்லது வெளி ஆட்களோ காரணம் இல்லை. மாறாக அவளது உணர்வுகள் கொல்லப்படுவதற்கு அவளுடனே வாழும், ஒரே வீட்டிற்குள் இருக்கும் சொந்தங்களே காரணம்.

இது என் தனிப்பட்ட கருத்து. நான் சென்னையில் மின்சார இரயிலில் பயணித்த காலங்களில், நிறைய பெண்கள் இடித்து பிடித்துக் கொண்டு பயணிக்கும் காட்சிகளைப் பார்க்கும் போது எனக்கு இவ்வளவு பெண்கள் சுய சார்பு அடைந்து முன்னேறிவிட்டர்களே என்ற மகிழ்ச்சி தோன்றி இருக்கிறது.

அப்போது நான் காதலிக்கவும் இல்லை, திருமண வாழ்க்கையைப் பற்றிய ஞானமும் இல்லை, தாய்மையின் சிறப்பும் அறிந்திருக்கவில்லை. :)

இன்றும் பல குடும்பங்களின் நிலை இரட்டை சம்பளம் வாங்கி அதிகம் செலவழித்து லக்கிலுக் எழுதியபடி அதிகப்படியாக வருவதும் பிரயோசனப்படாத வகையில் செலவழிக்கிறது. பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் பெண், ஐயாயிரம் ரூபாய் கிரச்சிர்க்கும் (creche) மீதி டாக்டருக்கும் என்று செலவழித்துக் கொண்டு, தாய்மையையும், தாய்க்காக ஏங்கும் குழந்தையின் மனதையும் கொன்று கொண்டிருக்கிறார்கள்.

2 comments:

நந்தாகுமாரன் said...

//

இந்தக் கதையில் நான் நேரிடையாக எழுதியதை விட எழுதாமல் படிப்பவரின் புரிதலுக்கு, கற்பனைக்கு என்று விட்டதே அதிகம்.

//

கதை முழுக்க இதை செய்துவிட்டு கடைசியில் படிப்பவர் எங்கே கேட்காமல் போய்விடுவாரோ என்று நீங்களே கேட்டது போல் இருக்கிறது கதையின் இறுதி வரிகள் - இது தான் எனக்கு பிடிக்கவில்லை என்றேன்

மற்றபடி ஏற்கனவே சொன்னது போல இந்தக் கதை எனக்குப் பிடித்திருக்கிறது

Vidhoosh said...

ம்ம். நீங்கள் நினைத்தது கரெக்ட்தான் நந்தா. சொல்ல வந்தது புரியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று நினைத்தேன்? :)
நல்ல அனுமானம்...
many thanks nandha.

Post a Comment